கொரோனா நேரத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட்டம்... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2021, 12:56 PM IST
Highlights


சேலம் மாவட்டம் தாரங்கலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தண்டு மாரியம்மன் கோவில், அம்மனி பழனியப்பா முதலி தெரு, காட்டு வேலாயுத முதலி தெரு ஆகியவற்றின் சந்திப்பில் 350 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறித்த சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 24ஆம் தேதி மின்னஞ்சல் வந்தது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மூலம் கிடைக்கும் குடிநீர் கிடைப்பதில்லை என அனுப்பப்பட்ட மின்னஞ்சலை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கொரோனா பேரிடர் நேரத்தில் குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும் குடிநீர் வசதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும், குடிநீர் கிடைக்காவிட்டால் அதை கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

click me!