சென்னையில் பயங்கரம்.. கொரோனா பயத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை..!

By vinoth kumarFirst Published Jun 3, 2021, 4:06 PM IST
Highlights

கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் டில்லி (74). இவரது மனைவி மகேஸ்வரி (64), இவர்களது மகள் நாகேஸ்வரி (34) ஆகிய 3 பேரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்தனர். மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்த ஒரு மாதத்தில் பிரிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒருவார காலமாக மூவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் அடைந்த அவர்கள் மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.ஆனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமானது. இதுபற்றி அவர்கள் உறவினர்கள் யாரிடமும் கூறாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மூவரும் தனித்தனியாக புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இரவு நீண்ட நேரம் வரை டில்லி வீட்டில் இருந்து சத்தம் வராததால் சந்தேகம் அடைந்த கீழ் வீட்டில் வசித்த வெங்கட்ராமன் சென்று பார்த்தார். அப்போது டில்லி, அவரது மனைவி, மகளுடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா பயத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!