சென்னை கிண்டியில் பிரபல நட்சத்திர ஓட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாக அறிவித்த மாநகராட்சி..!

By vinoth kumarFirst Published Jan 2, 2021, 11:31 AM IST
Highlights

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா ஓட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக நட்சத்திர ஓட்டல் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா ஓட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக நட்சத்திர ஓட்டல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தமிழகத்தில் நுழையாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில்  600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று மேலும் 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் மியாட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஓட்டல் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக நட்சத்திர ஓட்டல் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த ஓட்டலில் வருகிற 10ம் தேதி வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டலை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

click me!