உருமாறிய கொரோனா... காணும் பொங்களுக்கு மெரினாவில் அனுமதியில்லை... தொடர்ந்து அமலில் இருக்கும் தடைகள்..!

By vinoth kumarFirst Published Dec 31, 2020, 6:23 PM IST
Highlights

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணும் பொங்கலன்று கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணும் பொங்கலன்று கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது 

1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.  இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2, திரைப்படம் மற்றும் சின்னத்திரை உள்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3. நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்

1. புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆயதிரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.

2. மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

3. தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். மேலும், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

4. தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!