மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாத வீடுகள், நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோடை காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து பொதுமக்கள் குடிநீருக்காக குடங்களை தூக்கி கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது. பல நிறுவனங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற சொல்லியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக செயல்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி, 3 மாதங்களுக்குள் வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி சென்னை மாநகராட்சி சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மழைநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தாத 69,490 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் 38,507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க 1 வாரம் கெடு விதிக்கபட்டிருக்கிறது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.