திருமண மண்டபங்களை உடனே எங்ககிட்ட ஒப்படைக்கணும்.. உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி

By karthikeyan VFirst Published May 3, 2020, 4:27 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நோக்கத்திற்காக சென்னை மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க தயாராக இருக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழ்நாட்டில் 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1257 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னையில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளால் கடந்த 2 நாட்களாக மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 

ஆனாலும் சென்னை அளவுக்கு வேறு எந்த மாவட்டத்திலும் பாதிப்பு இல்லை. தலைநகரில் தான் பாதிப்பு படுதீவிரமாக உள்ளது. சென்னையில் 1200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் சுமார் 300 பேர் குணமடைந்திருந்தாலும் 900க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. எனவே கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும், குணமடைந்தவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டுமென்பதால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பாமல் வேறு இடத்தில் தங்கவைப்பது நல்லது. 

அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளை பெற்றுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், அதுவும் போதாதென்பதால் தற்போது சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருமண மண்டபங்களை ஒப்படைக்க தயாராக வைத்துக்கொள்ளுமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை தங்கவைக்க மற்றும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் இடவசதி வேண்டுமென்பதற்காக திருமண மண்டபங்களையும் பெறுகிறது சென்னை மாநகராட்சி.
 

click me!