தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொரோனாவை கொண்டுசேர்த்த கோயம்பேடு.. விழுப்புரத்தில் பயங்கரம்

By karthikeyan VFirst Published May 3, 2020, 3:31 PM IST
Highlights

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவியிருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கட்டுக்குள் இருந்துவந்த நிலையில், நேற்றும் இன்றும் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் லட்சக்கணக்கானோர் கூடுவர். அதனால் அங்கிருந்து கொரோனா வேகமாக அதிகமானோருக்கு பரவக்கூடிய அச்சுறுத்தல் இருப்பதை அறிந்த அரசு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு யாரும் செல்லக்கூடாது என உத்தரவிட்டதுடன், மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதியளித்தது. அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்க, போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனாலும் பணியிலிருந்த போலீஸ் உட்பட பல பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிலையில், அங்கு அவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுவருகிறது. 

நேற்று நிலவரப்படி, அரியலூரில் 18 பேர், கடலூரில் 7 பேர், பெரம்பலூரில் ஒருவர், விழுப்புரத்தில் இருவர், சென்னையில் 50 உட்பட மொத்தம் 88 பேர் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பிலிருந்தவர்களின் பாதிப்பு 130ஐ கடந்துவிட்டது. 

கோயம்பேட்டால் விழுப்புரம் மாவட்டம் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கோயம்பேடு தொடர்புடைய 32 பேருக்கு விழுப்புரத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் விழுப்புரம் மாவட்டத்தில் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்காம், கயத்தாறு, பூண்டி, தும்பூர் உள்ளிட்ட பல கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. 

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களால் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு உயர்ந்துவருகிறது. 
 

click me!