கொரோனா 2வது அலை பரவுகிறதா?... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 20, 2021, 10:56 AM IST
Highlights

நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சென்னை மாநகராட்சி  பிரகாஷ் பார்வையிட்டார். 

சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று முதல் முகாம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சென்னை மாநகராட்சி  பிரகாஷ் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: கூட்ட நெரிசல் இல்லாமல் முகாமை செயல்படுத்தவே நேரு  உள்விளையாட்டு அரங்கில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையின் பிற பகுதிகளிலும் வாரத்திற்கு ஒருநாள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அமைக்க உள்ளோம். தினமும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறோம். ஆனால் சென்னை மாநகராட்சியிடம் நாளொன்றுக்கு 60 ஆயிரம் தடுப்பூசிகளை போடக்கூடிய அளவிற்கு வசதிகள் உள்ளது. 

60 வயதுக்கு மேற்பட்டோர், 45 -59 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இன்றிலிருந்து 45 நாட்களுக்குள் 25-30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

கொரோனா 2வது அலை அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து என எண்ணி மக்கள் பீதி அடைய வேண்டாம். ஆனால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.  வீடுகளில் பணி செய்ய வருபவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.                                     

click me!