நீங்க இன்னும் கோவாக்சின் செகண்ட் டோஸ் போடவில்லையா?... அப்போ நாளை உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 22, 2021, 7:59 PM IST
Highlights

சென்னை  மாநகராட்சி பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே சரியான ஆயுதம் என்பதால் அதுகுறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதன் பலனாக பொதுமக்கள் மத்தியில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தோறும் சென்று தடுப்பூசி செலுத்துவது போன்ற பல்வேறு பணிகள் சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோவாக்சின் இரண்டாம் தடுப்பூசி செலுத்தாத 59,000 பேருக்காக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 

 சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் சென்னை மாநகராட்சி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

62,050 கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மருத்துவ முகாம்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

click me!