இழப்பீட்டு தொகையில் கைவரிசை காட்டிய நீதிமன்ற ஊழியர்... அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 22, 2021, 7:11 PM IST
Highlights

 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட நீதிபதிகளையும் நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட 1.50 கோடி ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட நீதிபதிகளையும் நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுசம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மூன்று குழுக்களை நியமித்தது. 

இக்குழுக்கள் அளித்த அறிக்கையில், ஆவணங்கள் முறையாக பராமரிக்காததால் இதுபோல மோசடிகள் நடந்துள்ளதாகவும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை நிரந்தர வைப்பீடுகள் எத்தனை என்ற விவரங்கள் இல்லைஇல்லை எனவும், வழக்கு எண்கள் குறிப்பிடாமல் இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்களும், போக்குவரத்து கழகங்களும் செலுத்தியுள்ளதாகவும், பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை சென்றடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய, மாவட்ட நீதிபதிகளை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டது.

தலைமை நோடல் அதிகாரியாக உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளர் சேதுராமனை நியமித்த நீதிபதிகள், வழக்கு எண், இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேதி, உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் உள்ளிட்ட விவரங்களுடன் செலுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும்  அறிவுறுத்தினர்.  பின், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
 

click me!