‘இதை மட்டும் செய்தால் போதும்’ மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி... சென்னை மாநகராட்சி அதிரடி..!

By Kanimozhi PannerselvamFirst Published May 27, 2021, 2:48 PM IST
Highlights

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்  கொள்ள முன்வர வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் முறையையும் சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன் மூலமாக இதுவரை 118 மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவது தொடர்பான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில்  சிறப்பு கவனம் செலுத்தி வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பு சி செலுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும்  97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாக பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதவி எண்களின் வாயிலாக 188 நபர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2505.2021 வரை மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 90 நபர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், 28 நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!