Bhogi pongal: மாசு இல்லாத போகியை கொண்டாடுங்கள்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.!

By vinoth kumarFirst Published Jan 13, 2022, 5:46 AM IST
Highlights

பொதுமக்களை நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவலாம் என்றும் தேவையற்ற பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடாத போகிப்பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடாத புகையில்லா போகி பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என   தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பில்;- பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்தது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இம்மாதிரியான நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண் மூக்கு எரிச்சல்போன்ற நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்குறிப்பிட்ட நச்ச கலந்த பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கிய பின்னர் பழைய ரப்பர் பொருட்கள், டியூப்கள்,  டயர் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிரச்சார ஊர்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது.  தவிர, எஃப்.எம் மூலமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, பொதுமக்களை நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவலாம் என்றும் தேவையற்ற பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடாத போகிப்பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

click me!