மரம் தங்கசாமி ஐயாவின் நினைவுநாளை ஒட்டி காவேரி கூக்குரல் சார்பில் தமிழகத்தில் 1.26 லட்சம் மரக்கன்று நட திட்டம்

By Asianet TamilFirst Published Sep 14, 2020, 5:46 PM IST
Highlights

தமிழகத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினம் வரும் 16ம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 1.26 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 
 

தமிழகத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினம் நாளை மறுநாள் (செப்.16) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் செப்.15, 16 ஆகிய தேதிகளில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 331 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இந்த 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகள் அனைத்தும் முழுக்க முழுக்க விவசாயிகளின் நிலங்களில் நடப்பட உள்ளன. குறைந்தப்பட்சம் 450 மரங்கள் முதல் அதிகப்பட்சமாக 15 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர். விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு, சுற்றுச்சூழலும் தானாக மேம்படும்.

அனைத்து மரக்கன்றுகளையும் விவசாயிகள் ஏற்கனவே ஈஷா நர்சரிகளில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். மரம் நடும் நிகழ்வின்போது விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று வழங்க உள்ளனர். புதுக்கோட்டையில் நடக்கும் விழாவில் மரம் தங்கசாமி ஐயாவின் மகன் திரு. கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!