விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் .. பாதி வழியில் பரிதவித்த பயணிகள் .. மாற்று பேருந்து இல்லாமல் நள்ளிரவில் அவதி ..

Published : Aug 26, 2019, 04:36 PM ISTUpdated : Aug 26, 2019, 04:38 PM IST
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய  ஓட்டுநர்  .. பாதி வழியில் பரிதவித்த பயணிகள் .. மாற்று பேருந்து இல்லாமல் நள்ளிரவில் அவதி ..

சுருக்கம்

செங்கல்பட்டு அருகே தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதியதில் அதில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் . பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டதால் பயணிகள் பாதி வழியில் மாற்று பேருந்து கிடைக்காமல் பரிதவித்தனர் .

சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று திருநெல்வேலி நோக்கி இரவு 8.20 மணியளவில் கிளம்பியது . படுக்கை வசதியுடன் கூடிய விரைவு பேருந்து என்பதால் சீக்கிரம் ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து அதில் பயணிகள் பயணம் செய்தனர் .

பேருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடந்து இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது . அப்போது குறுக்கே ஒரு கார் சாலையை கடக்க முயன்றிருக்கிறது . காரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாலை ஓரமாக ஓட்டுநர் திருப்பிய போது அங்கே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியது .அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

உடனடியாக ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி விட்டார் . இதனால் பயணிகள் பாதி வழியில் செய்வதறியாது திகைத்தனர் . பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ  இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் தப்பியோடிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர் .

மாற்று பேருந்து ஏற்பாடு செய்ய கோரி பயணிகள் பேருந்து நிர்வாகத்திடம் கூறினார் . உடனடியாக மாற்று பேருந்தை அனுப்புவதாக நிர்வாகம் கூறியிருக்கிறது . ஆனால் நள்ளிரவு கடந்தும் பேருந்து வராததால் பெண்கள் , குழந்தைகள் என நடுவழியில் பயணிகள் பரிதவித்தனர் . காவல் துறையும் முறையான நடவடிக்கை எடுக்காததால் அந்த வழியாக வந்த மற்ற பேருந்துகளில் ஏறி பயணிகள் ஊருக்குச் சென்றனர் . 

விபத்து நடந்த பிறகு மாற்று பேருந்தை அனுப்பாதது குறித்து அதிருப்தி தெரிவித்த பயணிகள் , சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாத்தின் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் .

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!