இனிமேல் அரை மணி நேரத்தில் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்.. பீலா ராஜேஷ் தகவல்

By karthikeyan VFirst Published Apr 9, 2020, 6:49 PM IST
Highlights

தமிழ்நாட்டில் துரித கொரோனா டெஸ்ட் உபகரணங்கள் மூலம் நாளை முதல் பரிசோதனை செய்யப்படவுள்ள நிலையில், அதன்மூலம் பரிசோதனை முடிவுகளை வெறும் அரை மணி நேரத்தில் தெரிந்துகொள்ளலாம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பரிசோதனை 7267 பேருக்கு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் பல்லாயிரக்கணக்கான பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் அதிகமானோருக்கு டெஸ்ட் செய்யப்பட்டு, அவர்களில் 1297 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டெல்லியில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டப்போகிறது. ஆனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 669 தான்.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியுடன் ஒப்பிடுகையில், வெறும் 7267 டெஸ்ட் மட்டுமே செய்துள்ளது தமிழ்நாடு. எனவே கூடுதல் பரிசோதனை செய்யும்பட்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் தாறுமாறாக உயரும் அபாயமும் இருக்கிறது. 

இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்லப்படும் டெஸ்ட் முறையில் முடிவு வருவதற்கு ஒரு நாளாவது ஆனது. அதனால் முடிவு தெரிவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், துரிதமாக டெஸ்ட் முடிவுகளை தெரிந்துகொள்ளும் துரித ஆய்வு உபகரணங்களுக்கு 4 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 50 ஆயிரம் துரித டெஸ்ட் கிட் இன்று இரவு வந்துவிடும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து, கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், துரித டெஸ்ட் உபகரணங்களின் மூலம் செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை அரைமணி நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

எனவே நாளை முதல் அதிகமானோருக்கு விரைவில் முடிவுகளை தெரிந்துகொள்ளும் படி வேகமாக டெஸ்ட் செய்ய முடியும். இதுவரை பரிசோதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, இன்று சற்று அதிகம் தான். இன்று ஒரே நாளில் 1172 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் அதிகமானோருக்கு செய்ய முடியும். 
 

click me!