நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. அடுத்த 10 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.. சுகாதாரத் துறை செயலாளர் பகீர்..!

By vinoth kumarFirst Published Apr 30, 2021, 10:05 AM IST
Highlights

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் அடுத்த 10 நாட்கள் மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் அடுத்த 10 நாட்கள் மக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் 150 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும், அதே வளாகத்தில் எஃப் பிளாக்கில் 100 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- போர்க்கால அடிப்படையில் 12,852 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் 576 படுக்கைகள் உருவாக்கப்பட்டன. நாளை 3,076 படுக்கைகளும், வருகிற 7ம் தேதிக்குள் 8,225 படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்குள் 500 படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.

கடந்த வாரம் 354 மருத்துவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 900 முதுகலை பட்டம் பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளோம்.  மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து வினியோகம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை. நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் என விளக்கமளித்தார். தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் மருந்தை பரிந்துரை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் தேவையை விட மூன்று மடங்கு ஆக்சிஜன் சேமிப்பில் உள்ளது. கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். வெளியே அதிகம் செல்ல வேண்டாம் என  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

click me!