பகிரங்க மன்னிப்பு கோரினார் அசம்கான் - ஆபாச வார்த்தை பேசியதால் சர்ச்சை

By Asianet TamilFirst Published Jul 30, 2019, 11:37 AM IST
Highlights

பாஜக  பெண் எம்பி ரமாதேவிக்கு எதிராக ஆபாச வார்த்தை பயன்படுத்தியதற்கு சமாஜ்வாடி  எம்பி அசம்கான் மக்களவையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

பாஜக  பெண் எம்பி ரமாதேவிக்கு எதிராக ஆபாச வார்த்தை பயன்படுத்தியதற்கு சமாஜ்வாடி  எம்பி அசம்கான் மக்களவையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, கடந்த வியாழக்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா குறித்த விவாதம் நடந்தது. அப்போது, அவையை நடத்திக் கொண்டிருந்த பாஜக பெண் எம்பி ரமாதேவி பற்றி சமாஜ்வாடி எம்பி அசம்கான் சர்ச்சைக்குரிய ஆபாச வார்த்தையை கூறினார்.

இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வலியுறுத்தியதால், அசாம்கானை மன்னிப்பு கேட்கும்படி ரமாதேவி கூறினார்.

இதனால், பாஜக பெண் எம்பிக்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் திமுக பெண் உறுப்பினர் கனிமொழி உள்பட கட்சி பாகுபாடின்றி பெரும்பாலான பெண் எம்பிக்கள் அசம்கான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

இதையடுத்து அனைத்து கட்சியினரிடமும் கலந்து பேசிய பின்னர் இது குறித்து முடிவெடுப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா அசம்கான் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய அசம்கான், ``நான் ஒன்பது முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். பலமுறை அமைச்சராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் கூட இருந்திருக்கிறேன்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளேன். அவை நடவடிக்கை என்னவென்று அறிந்திருக்கிறேன். இருப்பினும், என்னுடைய வார்த்தைகள் யாரையும் புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.'' என்று கூறினார்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ``அசம்கானின் பேச்சில் சில வார்த்தைகள் சரியாக கேட்காததால், உறுப்பினர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை அவற்றை திருப்பி கூற வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து ஓம் பிர்லா அவரை மீண்டும் மன்னிப்பு கேட்கும்படி கூறினார். இதையடுத்து அசம்கான் மீண்டும் ஒருமுறை பகிரங்க மன்னிப்பு கோரினார்.

அப்போது பேசிய பாஜக பெண் எம்பி ரமாதேவி, ``பெண்களை இதுபோன்ற தரக்குறைவான வார்த்தைகளால் இழிவுபடுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு முன் இதுபோன்று வெளியே பேசிக் கொண்டிருந்தார். தற்போது அவையிலும் பேசத் தொடங்கி விட்டார். அவரது இந்த வார்த்தைகளைக் கேட்பதற்காக நாங்கள் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை'' என்று கோபமாக பேசினார்.

பின்னர் பேசிய சபநாயகர் ஓம் பிர்லா, இந்த அவை அனைத்து உறுப்பினர்களுக்கும் உரியது. உங்களுடைய ஒத்துழைப்புடன் மட்டுமே அவையை வழி நடத்த முடியும். அவையின் தலைமையில் உங்களுக்கும் பங்குண்டு. அதனுடைய கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறாது என்று நம்புகிறேன்'என்றார்.

click me!