
சென்னையில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிஷ்பாஷா(26). இவர் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கீழ்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சக காவலர்களுடன் கடந்த 2 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மீண்டும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறி சாதிக் பாஷா அறையிலேயே ஓய்வெடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று சக காவலர்கள் பணியை முடித்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சாதிக் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாதிக் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பாக சாதிக் பாஷா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், மற்றொரு கடிதத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை வழங்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிக்கு சாதிக் பாஷா எழுதி இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த தற்கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சாதிக்பாஷா சிகிச்சை பெற விடுமுறை தராமல், காவல்துறை உயர்அதிகாரி இழுத்தடித்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.