சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலாதலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023” தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில், சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் எனவும், அமெரிக்காவிலுள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல சர்வதேச அளவில் தீம் பார்க் வடிவமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு சுற்றுலா கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு: பிரதமர் மோடி எப்போதுமே ஆதரவு - மெய்ப்பிக்கும் பழைய செய்திகள்!
தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள்/ முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம் / மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம் / பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய சுற்றுலாத்தலங்களில் புதிய விடுதிகளுக்கு வணிக மின் கட்டணம் மற்றும் நிறுவன மின் கட்டண வித்தியாச தொகை முதலீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும். ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள மற்றும் குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் புதிய திட்டங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்திய சான்றிதழ் ஆய்வு அடிப்படையில், மின் பயன்பாட்டில் கட்டணச் சலுகைகள் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு திரும்ப வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.