2024 மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழல் தேமுதிக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தரப்பில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பாமகவிற்கு மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடம் வழங்குவதாக அதிமுக உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி அதிமுகவிடம் தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள், சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசி வருகின்றனர். தேமுதிக சார்பில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிகவிற்கு 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அதிமுகவும் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதி என்பதால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று தினங்களில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடரும்” என்று கூறினார்.