நீர்நிலைகளை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அதிரடி அகற்றம்

By Asianet TamilFirst Published Jun 25, 2019, 1:01 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 கடைகள் மற்றும் கட்டிடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்து போனது. இதையொட்டி, ஆறு, ஏரிகள், குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகளும் வறண்டன. விவசாயிகள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, பல்வேறு தொழிலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், வறண்டுபோன நீர்நிலைகளை அரசியல் கட்சியனர் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் சிலர், ஆக்கிரமிப்பு செய்து, கடைகள், வீடுகள், கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.  இதனால், சிறிதளவு இருந்த நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதையொட்டி, தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஒருபுறம், பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மறுபுறம், காலி குடங்களுடன், பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீருக்காக அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தன.

அதன்படி, குன்னூரில் நீர்நிலைகள் மற்றும் பஸ் நிலையப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கடைகளை, காலி செய்யுமாறுக் கூறி சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், அந்த கட்டிடங்கள் காலி செய்யவில்லை. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 42 கடைகளை பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர்.

click me!