
8,144 Tamilnadu Government Employees Retire: தமிழ்நாடு அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 ஊழியர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர். தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகாரிகள் ஓய்வு பெறுவதும் இதுவே முதன் முறையாகும். மே மாத்தில் அதிக அளவு அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்ததால் மே 31ம் தேதியுடன் (இன்று) ஓய்வு பெறுகின்றனர்.
ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும்போது அதாவது மே மாதங்களில் பணி ஓய்வு பெறுவது வழக்கம். இதனால் தான் இன்று ஏராளமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இன்று ஓய்வு பெறும் 8,144 அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி 9.42 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும்.
அரசு வேலைக்கு தயாராகும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் இவ்வளவு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் அரசு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு அரசுத் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்த அரசு
இப்படி இளைஞர்கள் உயிரைக் கொடுத்து படித்துக் கொண்டிருக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) 74 வயது ராஜேந்திரன் என்பவரை நூலகர் ஆக நியமித்து, அவருக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 64-65 வயதுடைய மூன்று பேரை வெவ்வேறு பதவிகளில் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வேலை கொடுப்பதை விட்டு தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.