
Tamil Nadu Schools Opening May be Postponement: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்திய நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் அதன்பிறகு வெயிலின் தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
பள்ளிகளுக்கு செல்ல தயாராகும் மாணவர்கள்
பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கவும், பள்ளி மற்றும் வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவும், கழிவறைகள், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டுள்ளனர். பேக், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகிறனர்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரொனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைமலைநகரைச் சேர்ந்த 60 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரொனா தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். பொது இடங்களில் இரும்பும்போது கைக்குட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?
இப்படியாக கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டின் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கொரொனா அதிகரித்து வருதால் பள்ளிகளை மீண்டும் திறந்தால் அது சரியாக இருக்குமா? கொரோனா சற்று ஓய்ந்தபிறகு, மீண்டும் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.