6 மாதம் பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படுமா? தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Aug 19, 2020, 1:31 PM IST
Highlights

6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். 

6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை என தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இதனிடையே கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் 6 மாதங்களாக பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாவிட்டால் ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் அதி்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று விளக்கமளித்துள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூா்த்தி கூறுகையில்;- 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியப் பணம் செலுத்துவது நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல. வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை. 

6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டது என்று கூறினார். அத்துடன், பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் விளக்கினார். இது வழக்கமாக அனுப்பப்படும் சுற்றறிக்கைதான், இதனால் யாரும் எந்த அச்சமும் படத்தேவையில்லை என தெரிவித்துள்ளார். 

click me!