எச்சரிக்கையை மீறி கொரோனா நோயாளிடம் ரூ.12.50 லட்சம் வசூல்... பிரபல தனியார் மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை.!

By vinoth kumarFirst Published Aug 19, 2020, 10:38 AM IST
Highlights

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த அப்பாசாமி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு கொரோனா சிகிச்சைக்கான அங்கீகாரத்தை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த அப்பாசாமி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு கொரோனா சிகிச்சைக்கான அங்கீகாரத்தை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கொரோனா என்ற உயிர்க்கொல்லி மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை என்ற போர்வையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது.

அதன்படி பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று  அரசு கடும் எச்சரித்திருந்தது.

ஆனால், அரசின் இந்த எச்சரிக்கையை மீறி பல தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அந்தவகையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனையில் 18 நாட்களாக கொரோனாவிற்கு சிகிச்சைபெற்றுவந்த நபரிடம் ரூ.12.5 லட்சம் கட்டணம் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில்;- தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்று காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.இந்தநிலையில் பொதுமக்கள் சிகிச்சைக்கு அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது. ஏற்கனவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததை அடுத்து அம்மருத்துவமனை மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்பொழுது சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நோயாளி ஒருவருக்கு 18 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12.5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதில் முன்பணம் ரூ.2.5 லட்சம் போக மீத கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. உறுதிசெய்யப்பட்ட நிலையில் அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். தவறும் மருத்துவமனைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

click me!