கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியை நோக்கி தமிழ்நாடு.. ஒரே நாளில் 90 பேர் டிஸ்சார்ஜ்! இன்று 54 பேருக்கு கொரோனா

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 6:39 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1683ஆக அதிகரித்துள்ளது.
 

தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை கூடுவதோ குறைவதோ அச்சுறுத்தல் இல்லை. பாதிப்பு எண்ணிக்கையை நேரடியாக ஒவ்வொரு நாளுடன் ஒப்பிட்டு பயப்பட தேவையில்லை.

தமிழ்நாட்டில் நேற்று வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. ஆனால் இன்று 54 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்றைக்கு அதிகம் அல்லது குறைவு என்பது பெரிய விஷயமல்ல. ஏனெனில் தினமும் சராசரியாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட வெகு குறைவாகவே உள்ளது. 

இன்றைக்கு ஒரே நாளில் 6880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெறும் 54 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த 54 பேரில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அந்த 27 பேரில் 6 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் அடக்கம். பாதிக்கு பாதி சென்னையை சேர்ந்தவர்கள் தான். மற்ற மாவட்டங்களில் வெறும் 27 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1683ஆக அதிகரித்துள்ளது. 

மிகப்பெரிய நற்செய்தி என்னவென்றால், இன்று ஒரே நாளில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தினமும் அதிகமானோர் குணமடைந்து கொண்டிருக்கின்றனர். தினமும் கொரோனா உறுதிப்படுத்தப்படும் எண்ணிக்கைக்கு நிகராகவோ அல்லது அதிகமாகவோ குணமடையும் எண்ணிக்கை உள்ளது.

இதுவரை மொத்தம் 59,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் 1683 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. 23,303 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும் 106 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 87,159 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்துள்ளனர்.
 

click me!