40 ஏக்கர் ஏரி தூா் வாரும் பணி தீவிரம்

By Asianet TamilFirst Published Jul 17, 2019, 1:03 PM IST
Highlights

மணலி மாத்தூர் ஏரியை கால்நடை பராமரிப்பு துறையினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

மணலி மாத்தூர் ஏரியை கால்நடை பராமரிப்பு துறையினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

மணலி  அருகே  அமைந்துள்ள  மாத்தூர் ஏரி கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மழைக் காலங்களில், இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் பெய்யும்  மழைநீர், இந்த ஏரியில் தேங்கி நிற்கும். இதனால் இந்த தண்ணீர் சேமிப்பாக பயன்படுவதோடு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டது.

இந்நிலையில் மாத்தூர் ஏரியை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் செடி,கொடி வளர்ந்து சேறும் சேர்ந்து சகதியுமாக மாறியது.

தண்ணீர் செல்ல வழியில்லாமல், தூர்ந்து போனதால், கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையில் ஏரியில் நீர் நிற்காமல் சுற்றுவட்டார பகுதியான ஜெஜெ நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய  பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மழை பெய்யாததால் இந்த ஏரியில் நீர் இல்லாமல் வறண்டு காய்ந்து கிடக்கிறது.

இந்நிலையில் இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பொதுநல அமைப்புகளும், குடியிருப்போர் நல சங்கங்களும் கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கால்நடைத் துறையினர், வேளாண் துறையினர் இணைந்து பொக்லைன் இயந்திரம் மற்றும்  ஊழியர்களை  கொண்டு மாத்தூர் ஏரியை தூர்வாரும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை, 25 நாட்களுக்குள் ஒன்றரை அடி ஆழம் வரை தூர்வார இருப்பதாகவும், மாத்தூர் ஏரியை தூர்வாரி  சுத்தபடுத்துவதால் நிலத்தடி நீரை பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!