நிலத்தடி நீர் திருடிய லாரி சிறைபிடிப்பு…. - பொதுமக்கள் போராட்டம்

By Asianet TamilFirst Published Jul 17, 2019, 12:55 PM IST
Highlights

மாதவரம் அருகே மாத்தூரில் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுத்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர், நிலத்தடி நீரை நிரப்ப மாட்டோம் என லாரி உரிமையாளர் உறுதியளித்ததால் விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதவரம் அருகே மாத்தூரில் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுத்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர், நிலத்தடி நீரை நிரப்ப மாட்டோம் என லாரி உரிமையாளர் உறுதியளித்ததால் விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதவரம் பால்பண்ணை, மஞ்சம்பாக்கம், மாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஒருசில மாந்தோப்புகளில் தனியார் சிலர் ராட்சத ஆழ்துளை குழாய் அமைத்து மின் மோட்டார் அமைத்துள்ளனா். அதன்மூலம் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி, லாரிகளில் நிரப்பி நட்சத்திர ஓட்டல்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளும் விற்பனை செய்கின்றனர்.

இதனால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நிலத்தடி நீரை திருடுவதை தடுக்க வேண்டும் என கலெக்டருக்கும், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், நிலத்தடி நீர் திருடுவதை கண்டித்து பொது அமைப்புகளும், குடியிருப்போர் நலச்சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த குடிநீர் திருட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திருட்டுத்தனமாக நிலத்தடி நீரை எடுக்கும் லாரிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வந்து செல்கின்றன. அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க அதிவேகமாக ஓட்டுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. உயிர் சேதமும் நடக்கிறது.

நிலத்தடி நீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி விற்பனை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சிலர் தண்ணீரை திருடி விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மத்தூர் அருகே ஒரு மாந்தோப்பில் ஒரு தனியார் லாரி, நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுத்து நிரப்பிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாந்தோப்புக்கு சென்று அந்த லாரியை சிறைபிடித்தனர். மேலும், மாதவரம் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோர் இனிமேல்  திருட்டுத்தனமாக எடுக்கப்படும் குடிநீரை லாரியில் நிரப்ப மாட்டோம் என பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். பின்னர் லாரி அங்கிருந்து காலியாக சென்றது.

இச்சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் மற்றும் மதவரம் தாசில்தார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மாதவரம் தாசில்தாராக இருந்த முருகானந்தம், மாதவரம் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரியாக இருந்த ராஜா ஆகியோர் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுக்கும் இடங்களில் அதிரடி ஆய்வு செய்து மின்மோட்டார் குழாய்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அனுமதியின்றி செயல்பட்ட நிறுவனங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் வந்த குடிநீர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதை முறையாக கடைபிடிக்கவில்லை. இதனால், தொடர்ந்து நிலத்தடி நீர் திருட்டு நடக்கிறது.

ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிறுவனங்களும், மீண்டும் செயல்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

click me!