தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உச்சத்திற்கு போன கொரோனா பாதிப்பு.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Apr 30, 2020, 6:15 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2323ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், கடந்த 3 தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக 100க்கும் மேலாக உள்ளது. 

நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 121 பேருக்கும் நேற்று 104 பேருக்கும் கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், அவர்களில் 80-90% சென்னையை சேர்ந்தவர்களாக இருந்தனர். இன்றும் அதேநிலை தான் நீடிக்கிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்த 161 பேரில் 138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 2323ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகம். இன்று 9643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று சென்னையை தவிர கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கம் தான். எந்த மாவட்டத்திலுமே பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை கூட எட்டவில்லை. சென்னை தான் தமிழ்நாட்டிற்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 7000க்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கிட்டத்தட்ட 10 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதற்கு அதிகமான பரிசோதனை மேற்கொண்டதுதான் காரணம். இதுபோன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கை, அதிகமானோருக்கு டெஸ்ட் செய்வதுதான். அதை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துவருகிறது.

அதேவேளையில் இன்று ஒரேநாளில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1258ஆக அதிகரித்துள்ளது. 31,375 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 40 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.
 

click me!