ஆவடியில் 13 வயது சிறுமிக்கு கொரோனா..! பரிசோதனையில் உறுதி..!

By Manikandan S R SFirst Published Apr 16, 2020, 10:38 AM IST
Highlights
டெல்லி சென்று திரும்பிய ஒருவருடன் சிறுமி தொடர்பில் இருந்ததால் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 47 வயது ஆண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் ஒருவர் என 2 பேர் பலியான நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2,739 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று 37 பேர் குழுவில் இருந்து பூரண நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். இதன்மூலம் இதுவரையில் 118 பேர் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  நேற்று 38 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 34 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் மற்ற ஒருவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் எனவும் சுகாதரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை அடுத்த ஆவடியில் 13 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சென்று திரும்பிய ஒருவருடன் சிறுமி தொடர்பில் இருந்ததால் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு சிறுமி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். ஆவடியில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
click me!