சிவப்பு மண்டலத்தில் அதிகமான மாவட்டங்களை கொண்ட 3வது மாநிலம் தமிழ்நாடு.. முழு பட்டியல்

By karthikeyan VFirst Published May 1, 2020, 9:52 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளை உள்ளடக்கிய சிவப்பு மண்டலத்தில் அதிகமான மாவட்டங்களை கொண்ட மாநிலத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 

இந்தியாவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 9000க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

எனவே கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் கட்டாயத்தின் பேரில் மே 3க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. 

கொரோனா பாதிப்பு பகுதிகள், ஊரடங்கை தளர்த்துவதற்கும்  கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு கடுமையாக உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலத்திலும், பாதிப்பிலிருந்து மீண்ட மற்றும் குறைவான பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலத்திலும் இதுவரை கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்றுள்ளன. 

அந்தவகையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலத்தில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சிவப்பு மண்டலத்தில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தின் 19 மாவட்டங்களும் மகாராஷ்டிரா மாநிலத்தின் 14 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலிருந்து தான் அதிக மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களின் பட்டியலை பார்ப்போம்.

சிவப்பு மண்டல மாவட்டங்கள்:

சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம்.

ஆரஞ்சு மண்டல மாவட்டங்கள்:

தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி.

பச்சை மண்டலத்தில் கிருஷ்ணகிரி மட்டுமே உள்ளது. 
 

click me!