லாக்டவுனிலும் தேர்வை நடத்தியே தீருவேன் என அடம்பிடிப்பது ஏன்?... தமிழக அரசை திணறடித்த உயர் நீதிமன்றம்!

By vinoth kumarFirst Published Jun 8, 2020, 1:59 PM IST
Highlights

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 2-வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 2-வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வு  ஒத்திவைப்பு முடிவை அரசு கூறவில்லை என்றால் நீதிமன்றமே தடை விதிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள்  9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்? பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீரர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பொது முடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும் தெரிவித்த நீதிபதிகள் ஊரடங்கில் டாஸ்மாக்கை திறப்பதுபோல் அல்ல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு. டாஸ்மாக் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை. ஜூன் 15-ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம். ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை 2:30 மணிக்குள் தெரிவிக்க வேண்டு என அரசுத் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கெடு உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை முடிவை அரசு கூறவில்லை என்றால் நீதிமன்றமே தடை விதிக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

click me!