ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி மோதியதில் இருவர் பலியாயினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(80). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன்(35). இருவரும் உறவினர்கள். விருதாச்சலத்திற்கு ஒரு வேலையாக சென்றிந்த இரண்டு பேரும் மீண்டும் நேற்று மாலை கும்பகோணத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டியிருக்கிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார் வந்து கொண்டிருந்தது.
undefined
அப்போது அதே சாலையின் எதிரே விருத்தாசலம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதில் பயணம் செய்த இரண்டு பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள், தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.