அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தல் இருந்து அரியலூர், பெரம்பலூர் வழியாக துறையூர் வரை செல்லும் கே.ஆர்.டி என்ற தனியார் பேருந்து இன்று காலை 8 மணியளவில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேருந்து சரியாக 9.30 மணியளவில் அரியலூர் பேருந்து நிலையத்தை அடையும். வாரியங்காவல், பொன்பரப்பி, செந்துறை, ராயம்புரம் உள்ளிட்ட சுமார் 30 கி.மீ. தூரத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ஒரு பேருந்து சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
undefined
அரசு பேருந்து பயணிகளை ஏற்றிவிடக்கூடாது என்பதற்காக மின்னல் வேகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் கே.ஆர்.டி. பேருந்தும் ஒன்று. அந்த வகையில் இன்று செந்துறையை கடந்து ராயம்புரம் அருகே தனியார் பேருந்து மிகுந்த கூட்ட நெரிசலுடன் சென்று கொண்டிருந்தது. ராயம்புரம் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் ஓரத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு பள்ளம் நோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவையில் தீ பிடித்து எரிந்த பேருந்து: கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்
இந்த விபத்தில் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பலரும் படுகாயமடைந்தனர். மேலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தஞ்சை, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் நகர் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் வேகத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் அவ்வபோது அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.