அரியலூர் அருகே ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.
undefined
தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலையில் தொடங்கியது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில் பின்னர் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் இழுபறி ஏற்பட்டது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில் தற்போது அதிக இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதை அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் அரியலூர் அருகே ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் அல்லி நகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் மருதமுத்து என்பவர் 130 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனி வேல், ஆரம்பம் முதல் தான் முன்னிலையில் இருந்ததாகவும் இறுதியில் குளறுபடி செய்து மருதமுத்து வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். இதனால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடவேண்டும் என அவர் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பழனிவேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.