12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருவதாக சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலையரசன். இவர் தா.பழூர் அருகே உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர். முதலில் கட்டுமன்னார்குடி அடுத்த ஓமம்புளியூர் அரசு பள்ளியில் பணிக்கு சேர்ந்து அங்கிருந்து மாறுதல் பெற்று சிலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் பணி மாறுதல் பெற்று காரைக்குறிச்சி உயர் நிலைப்பள்ளியில் பணிக்கு சேர்ந்தார்.
தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரைக்குறிச்சி அரசு பள்ளியில் 2014ம் ஆண்டில் இருந்து இந்த பள்ளியில் விடுப்பு இன்றி பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர் கலையரசன் கூறுகையில் “காலையில் 9 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தி வகுப்பு தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் தொடர்பாக கற்று தருவது வழக்கம் என கூறுகிறார்”.
undefined
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறுகையில் இந்த பள்ளியில் 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர் கலையரசன். இவர் பல்வேறு வேலையிலும் விடுப்பு இன்றி பள்ளிக்கு வந்து மாணவர்களை ஊக்குவித்து மாணவர்களுக்கு முன் மாதிரி ஆசிரியராக திகழ்கிறார். இவர் அரசு விடுமுறை நாட்களிலும் கூட அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கு வரும் இலவச திட்டங்களை பொறுப்புடன் பெற்று முன்னின்று மாணவர்களுக்கு பகிர்ந்து அளிப்பது முதல் அனைத்தையும் செய்து முடிப்பார்.
இந்த பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இங்கு உள்ள ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்பிப்பதுதான் என கூறினார்.