இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ராமன் நியமனம்!!

By karthikeyan VFirst Published Dec 21, 2018, 10:08 AM IST
Highlights

இந்திய மகளிர் அணியின் புதிய பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 

இந்திய மகளிர் அணியின் புதிய பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், டபிள்யூ.வி.ராமன், ரமேஷ் பவார், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்கள் கிப்ஸ், கேரி கிறிஸ்டன் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களை கபில் தேவ், அன்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது. 

வெங்கடேஷ் பிரசாத், கேரி கிறிஸ்டன் மற்றும் டபிள்யூ.வி.ராமன் ஆகிய மூவரின் பெயரும் இறுதியாக பிசிசிஐ-க்கு பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் வெங்கடேஷ் பிரசாத் நிராகரிக்கப்பட்டு கேரி கிறிஸ்டன் மற்றும் டபிள்யூ.வி.ராமன் ஆகிய இருவரின் பெயரும் கடைசியாக பரிசீலிக்கப்பட்டது. கேரி கிறிஸ்டனை தேர்வு செய்யலாம் என்ற நோக்கி அவரிடம் ஸ்கைப் மூலம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் பெங்களூரு அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர், அதிலிருந்து விலக மறுத்ததால், தேர்வு செய்யப்படவில்லை. பிசிசிஐ விதிப்படி இரு அணிகளுக்கு ஒருவர் பயிற்சியாளராக செயல்பட முடியாது. 

அதனால் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த டபிள்யூ.வி.ராமன் தேர்வு செய்யப்பட்டார். ஒருவேளை கேரி கிறிஸ்டன் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அவர்தான் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பார். அவர் அதற்கு உடன்படாததால் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 23 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ரஞ்சி அணிகளுக்கு பயிற்சியாளராகவும் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!