
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியின் சூப்பர் சிக்ஸ் பிரிவில், இந்தியா 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 46.4 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் மிதாலி ராஜ், தொடக்க வீராங்கனை மோனா மேஷ்ராம் ஆகியோர் சிறப்பாக ஆடி மதிப்பை உயர்த்தினர்.
மிதாலி ராஜ் 85 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார். அதே 85 பந்துகளை சந்தித்த மோனா, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வேதா 18, தேவிகா 19, சிக்ஷா 21 ஓட்டங்கள் எடுக்க, இதர வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்தனர். இவ்வாறாக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.
தென் ஆப்பிரிக்க தரப்பில், மாரிஸானே காப், அயபோங்கா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 206 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் திரிஷா ஷெட்டி அதிகபட்சமாக 52 ஓட்டங்கள் எடுத்தார். இதர வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 46.4 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்கா.
இந்தியாவின் சிக்ஷா பாண்டே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். எக்தா பிஷ்த் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.