
2017-ஆம் ஆண்டுக்கான "சிறந்த விளையாட்டு வீரர்' விருதை தடகள வீரர் உசேன் போல்ட், "சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதை ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பில்ஸ்-ம் வென்றுள்ளனர்.
இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அலைச் சருக்கு (சர்ஃப்) வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட் சேர்ந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு "லாரஸ்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
விளையாட்டு உலகின் "ஆஸ்கார்' விருதாக மதிக்கப்படும் இந்த விருது, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கும் விழா ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜான்சனிடம் விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, பார்வையாளர்களிடையே பேசிய உசேன் போல்ட், “இந்த அற்புதமான விருது வழங்கியதற்காக நன்றி. எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக லாரஸ் விருதை கருதுகிறேன். அதையும் 4-ஆவது முறையாக பெற்றுள்ளதன் மூலம், ஃபெடரர் போன்ற வீரர்களின் வரிசையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
சிறந்த வீராங்கனைக்கான விருது, ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் 4 தங்கமும், ஒரு வெண்கலமும் வென்ற சைமன் பில்ஸுக்கு வழங்கப்பட்டது. அவருக்கான விருதை, ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை நாடியா கோமானெசி, பிரின்ஸ் ஆல்பர்ட் ஆகியோர் வழங்கினர்.
விருது பெற்ற பின்னர் பேசிய சைமன் பில்ஸ், "சந்தோஷத்தில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. எனக்கு முன்னோடியாக நினைத்த நபர்களிடம் இருந்து விருதை பெற்றது, எனக்கான கெளரவமாகும். இந்த விருது எனக்கானது மட்டுமல்ல; இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அனைவரின் சார்பாகவும் இதை நான் பெற்றுள்ளேன். எனக்கு இந்த விருதை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதைப் போல, ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க், மாற்றுத் திறனாளி வாள்வீச்சு வீராங்கனையான இத்தாலியின் பீட்ரிஸ் வியோ, சைக்கிள் பந்தய வீராங்கனையான பிரிட்டனின் ரேச்சல் அதெர்டன் ஆகியோர் இதர பிரிவுகளில் விருது வென்றனர்.
அத்துடன், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அகதிகள் அணிக்கும் நல்லெண்ண விருது வழங்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.