மகளிர் முத்தரப்பு டி20: ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வி கண்டது இந்தியா...

First Published Mar 27, 2018, 10:36 AM IST
Highlights
Women Tripartite t20 India Lost to Australia


மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வி அடைந்தது. 

மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதன், 4-வது ஆட்டத்தில்  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா. 

இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 186 ஓட்டங்கள் குவித்தது. 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.  இதைடுத்து, 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பெத் மூனி 46 பந்துகளில் 71 ஓட்டங்கள் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். அவருக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக எலிஸ் வில்லானி 42 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்தார். 

விக்கெட் கீப்பர் அலிஸா ஹீலி 9 ஓட்டங்கள், ஆஷ்லிக் கார்டனர் 17 ஓட்டங்கள், எல்லிஸ் பெர்ரி 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் லான்னிங் 11 ஓட்டங்கள், ரசல் ஹேனஸ் 10 ஓட்டங்கள் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 186 ஓட்டங்கள் எடுத்தது. 

இந்திய அணியின் சார்பில் ஜூலான் கோஸ்வாமி 4 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். பூஜா வஸ்திராகர் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டைக் கைப்பற்றினார். பூனம் யாதவும், ராதா யாதவும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 30 பந்துகளில் 33 ஓட்டங்களும், அனுஜா பாட்டீல் 26 பந்துகளில் 38 ஓட்டங்களும் எடுத்தனர். 

அதிரடி ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 3 ஓட்டங்களிலும், மிதாலி ராஜ் 'டக்' அவுட்டும் ஆகியும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். பூஜாவும், அனுஜாவும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடியும் போதிய ஓவர்கள் இல்லாத காரணத்தில் இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேகன் ஸ்குட் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவுக்கு இது 3-வது தோல்வி. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை நேற்று மீண்டும் சந்தித்த இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியது. தலா 2 வெற்றிகளுடன் உள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் வரும் நாளை 5-வது ஆட்டத்தில் மோதுகின்றன.

பின்னர், 29-ஆம் தேதி நடைபெறவுள்ள 6-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை இந்தியா மீண்டும் சந்திக்கிறது. இறுதி ஆட்டம் மார்ச் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையடுத்து, இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றன.  இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 

tags
click me!