
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் விம்பிள்டனில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், விம்பிள்டனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதலாம்.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோத வாய்ப்புகள் அதிகம்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் திங்கள்கிழமை இலண்டனில் தொடங்குகிறது. அதில் யாருடன் யார் மோதுவது என்பதை தீர்மானிப்பதற்கான டிரா இலண்டனில் நேற்று நடைபெற்றது.
அதன்படி போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் முர்ரே, தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரரையும், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஜோகோவிச், ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸானையும் சந்திக்கின்றனர்.
போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், தனது முதல் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவையும், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால், தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானையும் சந்திக்கின்றனர்.
மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் இந்த முறை பங்கேற்கவில்லை. எனவே அடுத்த நிலையில் இருக்கும் வீராங்கனைகள் பட்டம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரும், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவும் காலிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.
போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப், தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா அல்லது செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை சந்திக்கலாம்.
ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இறுதிச் சுற்றில் நடாலும், ஃபெடரரும் மோதலாம். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் இறுதிச் சுற்றில் மோதியுள்ளனர் என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.