
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் யார் யார் மோத வாய்ப்புள்ளது என்பதை டிரா மூலம் கணித்தனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசை அடிப்படையில் யாருடன் யார் மோத வாய்ப்புள்ளது என்பதைக் கணிக்கும் "டிரா' (குலுக்கல்) நேற்று நடைபெற்றதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது முதல் சுற்றில் ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை சந்திக்கிறார்.
டிராவின் படி அவர் தனது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஸாவை சந்திக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் கார்பின் முகுருஸா தனது முதல் சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை சந்திக்கிறார்.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, தனது அரையிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
கரோலினா தனது முதல் சுற்றில் சீனாவின் ஸங் சாய்சாயை சந்திக்கிறார்.
டிராவின் படி, கெர்பர் தனது காலிறுதியில் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவாவை சந்திக்க வாய்ப்புள்ளது. அதேபோல் முகுருஸா தனது காலிறுதியில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை சந்திக்கலாம்.
இதர 2 காலிறுதிகளில் ஒன்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன், சைமேனா ஹேலப்பும், மற்றொன்றில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவுடன், கரோலினா பிலிஸ்கோவாவும் மோத வாய்ப்புள்ளது.
அதேபோன்று ஆடவர் பிரிவின் அரையிறுதியில் ஜோகோவிச் - நடால் மோத வாய்ப்புள்ளது.
நடால் தனது "10-ஆவது பட்டம்' என்ற கனவுடன் களம் காணுகிறார். ஜோகோவிச்சோ கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்.
அதேபோல், மற்றொரு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவும் மோத வாய்ப்புள்ளது.
தற்போதைய டிராவின் படி ஆட்டம் நகரும் பட்சத்தில், முர்ரே தனது காலிறுதியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை சந்திப்பார்.
மற்றொரு காலிறுதியில் வாவ்ரிங்கா, குரேஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் இதர இரண்டு காலிறுதிகளில் ஒன்றில் நடாலுடன், கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும், மற்றொன்றில் ஜோகோவிச்சுடன், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதுவர்.
இந்த நிலையில் முர்ரே தனது முதல் சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்நெட்ஸாவை சந்திக்கிறார்.
அதேபோல் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்ஸூடனும், நடால், பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருடனும் மோதுகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.