ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பும் ஸ்மித் கேப்டனா..?

By karthikeyan VFirst Published Jan 6, 2019, 12:24 PM IST
Highlights

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் கடந்த சீசனில் ஆடவில்லை. தடை முடிந்து இந்த ஐபிஎல் சீசனுக்கு திரும்ப உள்ளனர். 

ஐபிஎல் 12வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. இதற்கான ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் கடந்த சீசனில் ஆடவில்லை. தடை முடிந்து இந்த ஐபிஎல் சீசனுக்கு திரும்ப உள்ளனர். ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தக்கவைத்துள்ளன. 

இவர்கள் இருவருமே தடை பெறுவதற்கு முன் அவர்கள் ஆடிய அணிக்கு கேப்டனாக இருந்தவர்கள். ஸ்மித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்தனர். இவர்களுக்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சீசனில் இவர்கள் ஆடாததால், ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும் சன்ரைசர்ஸ் அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டனாக செயல்பட்டனர். இருவருமே சிறப்பாக கேப்டன்சி செய்தனர். 

அதிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு வில்லியம்சன் என்ற ஒரு சிறந்த கேப்டனை அடையாளம் காண, வார்னருக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. அருமையாக கேப்டன்சி செய்து இறுதி போட்டி வரை அணியை அழைத்து சென்றார். 

அதேபோலவே ரஹானேவும் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ராஜஸ்தான் அணி, கடந்த சீசனின் தொடக்கத்தில் படுமோசமான நிலையில் இருந்தாலும், சீசனின் இரண்டாம் பாதியில் வெகுண்டெழுந்து அருமையாக ஆடியது. 

இந்நிலையில், ஸ்மித்தும் வார்னரும் மீண்டும் ஐபிஎல் தொடரில் அவர்கள் ஆடிய அணிகளுக்கு திரும்பும் நிலையில், கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழும். சன்ரைசர்ஸ் அணிக்கு கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஏனெனில் அந்தளவிற்கு வில்லியம்சன் அனைவரையும் ஒரு கேப்டனாக கவர்ந்துவிட்டார். 

ராஜஸ்தான் அணிக்கும் ஸ்மித் கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை என்று மும்பை மிரரில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்மித் இரண்டாண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு அணிக்கே கேப்டனாக செயல்பட தடை விதித்த ஒருவருக்கு ஐபிஎல்லில் கேப்டன் பதவியை பிசிசிஐ தூக்கி கொடுக்காது. அதுமட்டுமல்லாமல் ஸ்மித் ஐபிஎல் தொடர் முழுவதையும் ஆடுவது சந்தேகம் தான். ஏனெனில் அவரது தடை முடிய உள்ளதால், உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அவரது பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் போய்விடுவார். 

எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானேவே தொடர்வார். 
 

click me!