பாண்டியாவின் வருகை விஜய் சங்கருக்கு சொல்லும் மெசேஜ் என்ன..?

By karthikeyan VFirst Published Jan 25, 2019, 5:42 PM IST
Highlights

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டனர். 
 

சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதும் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்து தொடரில் ஆடுவதற்கு அங்கு செல்வது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் எதிரொலியாக இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாக நாடு திரும்பினர். 

இதையடுத்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

ஹர்திக் பாண்டியா - ராகுல் விவகாரத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியை நியமிக்கக்கோரி பிசிசிஐ நிர்வாகக்குழு தாக்கல் செய்த மனுவை வரும் பிப்ரவரி 5ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இதற்கிடையே ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் மீதான இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து தொடரில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்கிறார். ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் ஆட உள்ளார். 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரர் நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பாண்டியாவையும் அனுப்பியது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் பிசிசிஐ அதிகாரி ஒருவர். இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பிசிசிஐ அதிகாரி அளித்துள்ள பேட்டியில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்கள் நியூசிலாந்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், தேர்வுக்குழு திடீரென மீண்டும் கூடி, இடைநீக்கம் செய்யப்பட்ட வீரர்களில் ஒருவரை நியூசிலாந்துக்கு அனுப்புகிறது. இதன்மூலம் விஜய் சங்கருக்கு சொல்லப்படும் செய்தி என்ன? ஹர்திக் பாண்டியாவை போல ராகுலும் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்தார். அப்படியிருக்கையில் ஹர்திக் பாண்டியா மட்டும் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுவிட்டு, ராகுலை மட்டும் இந்தியா ஏ அணியில் ஆட வைப்பது ஏன்? பாண்டியாவை மட்டும் நியூசிலாந்துக்கு அனுப்ப சொல்லி தேர்வுக்குழுவிற்கு பரிந்துரைத்தது யார்? பாண்டியாவை நியூசிலாந்துக்கு அனுப்ப சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அப்படியென்றால் அந்த அழுத்தத்தை கொடுத்தது யார்? ராகுல் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? இதன்மூலம் ராகுலுக்கு சொல்லப்படும் செய்தி என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
 

click me!