108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது வங்கதேசம்…

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 02:26 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது வங்கதேசம்…

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது வங்கதேசம்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம், 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளரான மெஹதி ஹசன் மிராஸ் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை சரிவுக்கு உள்ளாக்கினார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 220 ஓட்டங்களும், இங்கிலாந்து 244 ஓட்டங்களும் குவித்தன.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸ் ஆடிய வங்கதேசம் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 66.5 ஓவர்களில் 296 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக இம்ருள் கயெஸ் 78, மகமதுல்லா 47, அல்ஹசன் 41 ஓட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து 273 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணியில் டக்கெட்-அலாஸ்டர் குக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் சேர்த்தது. டக்கெட் 56 ஓட்டங்களில் வெளியேற, இங்கிலாந்தின் சரிவு ஆரம்பமானது.

பின்னர் வந்த ஜோ ரூட் 1, கேரி பேலன்ஸ் 5, மொயீன் அலி 0 என அடுத்தடுத்து வெளியேற, குக் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 45.3 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. ஒரே செஷனில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 6 விக்கெட்டுகளையும், ஷகிப் அல்ஹசன் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அறிமுக தொடரில் விளையாடிய மெஹதி ஹசன் ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் தட்டிச் சென்றார்.

2000-இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணி, டெஸ்ட் போட்டியில் இதற்கு முன்பு வரை ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை மட்டுமே வென்றிருந்த நிலையில், இப்போது இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சகாப்தம் படைத்துள்ளது.

இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணிக்கு இது 8-ஆவது வெற்றியாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!