அதுக்குள்ள 6 விக்கெட் காலி!! மிரட்டும் இந்தியா.. திணறும் வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Oct 5, 2018, 4:31 PM IST
Highlights

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறிவருகிறது. 
 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறிவருகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் பிரித்வி ஷா அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். 

புஜாரா 86 ரன்களும் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 92 ரன்களும் குவித்தனர். ரஹானே 41 ரன்கள் அடித்தார். இவர்களைத் தவிர உமேஷ் யாதவும் அபாரமாக ஆடி வெஸ்ட் இண்டீஸை மிரட்டினார். 9வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ் 2 சிக்ஸர்களுடன் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

ஜடேஜா சதமடிப்பதற்காக காத்திருந்த கேப்டன் விராட் கோலி, ஜடேஜா சதமடித்ததும் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரும் அந்த அணியின் கேப்டனுமான பிராத்வெயிட்டை மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கிளீன் போல்டாக்கினார் முகமது ஷமி. 2 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். 

இதையடுத்து ஷமி வீசிய 5வது ஓவரில் அடுத்த விக்கெட்டை வீழ்த்தினார். பவலை 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றினார் ஷமி. இதையடுத்து ஹோப்பை 10 ரன்களில் கிளீன் போல்டாக்கினார் அஷ்வின். 21 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெட்மயர் நிதானமாக ஆடிவந்தார். ஆனால் அவரும் 10 ரன்களில் ரன் அவுட்டானார்.

இதையடுத்து ஆம்பிரிஷை 12 ரன்களில் ஜடேஜாவும் டவ்ரிச்சை 10 ரன்களில் குல்தீப்பும் வெளியேற்றினர். 74 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறிவருகிறது. 

click me!