ரைட், லெஃப்ட்னு மாறி மாறி வெளுத்து வாங்கிய வார்னர்!! கதிகலங்கிய கெய்ல்.. வார்னர் செஞ்சதுல எந்த தப்பும் இல்ல

By karthikeyan VFirst Published Jan 19, 2019, 4:37 PM IST
Highlights

வார்னரின் பேட்டிங்கை மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஆய்வு செய்தது. வார்னர் பேட்டிங் ஆடியதில் எந்த தவறும் இல்லை என்று அந்த கிளப் தெரிவித்துள்ளது. 

வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் ஒரு போட்டியில் இடது மற்றும் வலது ஆகிய இரண்டு கைகளிலும் பேட்டிங் பிடித்து மிரட்டினார். 

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அவர் ஆடவில்லை. ஆனால் டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியில் ஆடிவருகிறார். அந்த அணிக்கு அவர்தான் கேப்டனும் கூட.

கடந்த புதன்கிழமை வார்னர் தலைமையிலான சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணி, மோர்டஸா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனும் இடது கை பேட்ஸ்மேனுமான வார்னர், கிறிஸ் கெய்ல் வீசிய 19வது ஓவரில் வலது கை பேட்டிங் ஆடினார். இடது கை பேட்ஸ்மேனான வார்னர், வலது கையில் பேட்டிங் ஆடி, ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார். இது அனைவரையும் வியக்கவைத்ததுடன் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இடது கை பேட்ஸ்மேனான அவர், பவுலிங் போடப்பட்ட பிறகு, வலது கையில் திரும்பி பேட்டிங் ஆடலாம். ஆனால் கிரீஸில் நிற்கும்போதே மாற்று கையில் பேட்டிங் ஆடலாமா என்ற சர்ச்சை எழுந்தது. 

இது ஐசிசி விதிக்குட்பட்டதா என்ற சர்ச்சையும் எழுந்தது. வார்னரின் பேட்டிங்கை மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஆய்வு செய்தது. வார்னர் பேட்டிங் ஆடியதில் எந்த தவறும் இல்லை என்று அந்த கிளப் தெரிவித்துள்ளது. ஐசிசி விதியில், பேட்ஸ்மேன் ஒரு கையில் தான் பேட்டிங் ஆட வேண்டும் என்று எந்த இடத்திலும் இல்லை. எனவே வார்னர் ஆடியதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தது. 

அந்த குறிப்பிட்ட போட்டியில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 61 ரன்களை குவித்தார். வார்னர் மற்றும் லிட்டன் தாஸின் அதிரடி அரைசதத்தால் சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராங்பூர் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 

click me!