என் நண்பன் அந்த பக்கம் நிற்கும்போது எதுவுமே சாத்தியம்தான்!! சிலிர்த்த கோலி.. நெகிழ்ந்த ரோஹித்

By karthikeyan VFirst Published Oct 22, 2018, 10:47 AM IST
Highlights

தவான் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களில் அவுட்டான போதும், ரோஹித்தும் கோலியும் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். களமிறங்கியது முதலே கோலி அடித்து ஆட, ரோஹித் வழக்கம்போல களத்தில் நிலைக்கும் வரை நிதானமாக ஆடினார். 

மறுமுனையில் ரோஹித் சர்மா நிற்கும்போது, எவ்வளவு பெரிய இலக்கையும் எளிதாக எட்டிப்பிடித்து விடலாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 323 ரன்கள் என்ற கடின இலக்கை ரோஹித் சர்மா - கோலி ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 42 ஓவரிலேயே எளிதாக எட்டி வெற்றி பெற்றது. 

தவான் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களில் அவுட்டான போதும், ரோஹித்தும் கோலியும் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். களமிறங்கியது முதலே கோலி அடித்து ஆட, ரோஹித் வழக்கம்போல களத்தில் நிலைக்கும் வரை நிதானமாக ஆடினார். ரோஹித் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் அதன்பிறகு அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதிரணி அறிந்த விஷயம்தான். ஆனாலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. விக்கெட்டுக்கான வாய்ப்பே கொடுக்காமல் இருவருமே அபாரமாக ஆடினர். 

கோலி 140 ரன்கள் எடுத்து அவுட்டாக, ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தனிப்பட்ட முறையும் பார்ட்னர்ஷிப்பாகவும் இருவரும் பல சாதனைகளை வாரி குவித்துள்ளனர். 

போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 322 ரன்களை குவித்தது. நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் இலக்கை எட்டுவது கடினமல்ல என்பதை உணர்ந்திருந்தோம். அதுவும் ரோஹித் சர்மா மறுமுனையில் பேட்டிங் ஆடும்போது எவ்வளவு பெரிய இலக்கும் கடினமாக இருக்காது. பொதுவாக ரோஹித்தும் தவானும் அடித்து ஆடுவார்கள் என்பதால் முதல் மூன்று வீரர்களில் நான் தான் களத்தில் நிலைத்து நின்று ஆட விரும்புவேன். ஆனால் இந்த முறை நான் அடித்து ஆடுகிறேன்; நீங்கள் நிலைத்து ஆடுங்கள் என்று ரோஹித்திடம் கூறினேன். அதேபோல ரோஹித்தும் ஆடினார்.

நான் அவுட்டான பிறகு ராயுடு களத்திற்கு வந்ததும் என் பணியை ரோஹித் கையில் எடுத்துக்கொண்டார். இதுதான் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்டிங் முறை என்று கருதுகிறேன். பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவதுதான் முக்கியம். நானும் ரோஹித்தும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 5 அல்லது 6வது முறையாக இருக்கும் என நினைக்கிறேன். ரோஹித்துடன் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இப்படி பேட்டிங் செய்தால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் வெற்றிக்கு உதவும் என்பதும் எங்களுக்கு தெரியும் என்று கோலி நெகிழ்ந்தார். 
 

click me!