தனி ஒருவனாக இந்திய அணியை தூக்கி நிறுத்திய விராட் கோலி!! இங்கிலாந்து மண்ணில் முதல் சதம்

First Published Aug 3, 2018, 9:31 AM IST
Highlights
virat kohli hitting his first test century in england soil


இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனி நபராக போராடி, இந்திய அணி 274 ரன்கள் எடுக்கவைத்த கோலி, இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் முரளி விஜயும் தவானும் சிறப்பாக தொடங்கினர். இந்திய அணி 50 ரன்களை எட்டும்வரை விக்கெட்டுகள் விழவில்லை. ஆனால் அதன்பிற்கு முரளி விஜய், ராகுல், தவான் ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. அதனால் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பிறகு கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். எனினும் இந்திய அணி 100 ரன்களை எட்டியபோது ரஹானே அவுட்டானார். அதன்பிறகு களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக கோலிக்கு ஆதரவாக ஆடினார். எனினும் அவர் 22 ரன்கள் மற்றும் அஷ்வின் 10 ரன்கள், ஷமி 2 ரன்கள் என மீண்டும் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். 

விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷாந்த் சர்மா 9வது விக்கெட்டாக அவுட்டானார். அதனால் கோலி சதமடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், உமேஷ் யாதவ் நிதானமாக தெளிவாக இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டு, கோலி சதமடிக்க உதவினார். இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த கோலி, அதன்பிறகு அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். 149 ரன்கள் குவித்த கோலி, கடைசி விக்கெட்டாக அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. 

13 ரன்கள் முன்னிலை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் குக்கை முதல் இன்னிங்ஸை போலவே போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. 

click me!