விளையாட்டு துறையின் உயரிய விருதை பெறும் விராட் கோலி!! தமிழக வீரர் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது

By karthikeyan VFirst Published Sep 20, 2018, 4:21 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

விளையாட்டு துறையில் தலைசிறந்து விளங்கும் வீரர்களை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கேல் ரத்னா விருது மிக உயரிய விருது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளையும் சதங்களையும் குவித்துவருகிறார். இந்திய அணியின் கேப்டனாக வெற்றிகளை குவித்துவருவதோடு, சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். உலகின் தலைசிறந்த வீரராக விராட் கோலி வலம்வந்துகொண்டிருக்கிறார். 

விராட் கோலியின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கடந்த 2016ம் ஆண்டே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

இந்த முறை விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், ஹிமாதாஸ், ஜின்சன் ஜான்சன், டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருதையும் 8 வீரர்களுக்கு துரோணாச்சாரியர் விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வரும் 25ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார். 


 

click me!